ரோகித் ‘பார்ட்னர்’ சுப்மன் * இர்பான் பதான் பாராட்டு | ஜனவரி 19, 2023

தினமலர்  தினமலர்
ரோகித் ‘பார்ட்னர்’ சுப்மன் * இர்பான் பதான் பாராட்டு | ஜனவரி 19, 2023

புதுடில்லி: ‘‘ஒருநாள் அணியில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு சுப்மன் கில் சிறந்த ‘பார்ட்னராக’ இருப்பார்,’’ என இர்பான் பதான் தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்னில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் மிரட்டிய இந்திய வீரர் சுப்மன் கில், 149 பந்தில் 208 ரன் குவித்தார். இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் ஆனார்.

தவிர சமீபத்திய வங்கதேச போட்டியில் இந்தியாவின் மற்றொரு துவக்க வீரர் இஷான் கிஷான் 210 ரன் விளாசி இருந்தார். இதனால் துவக்க வீரராக யார் களமிறங்குவது என பலத்த போட்டி காணப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் ‘ஆல் ரவுண்டர்’ இர்பான் பதான் கூறியது:

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ரோகித்துடன் இணைந்து எந்த இளம் வீரர் துவக்கம் தருவது என்பதை ஒரு பிரச்னையாக, இந்த நேரத்தில் யாரும் பேசக் கூடாது. இதற்கான பதிலை தெளிவாகத் தந்து விட்டார் சுப்மன் கில். துவக்க வீரராக களமிறங்குவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் இவருக்கு உள்ளது.

தவிர இது தொடர்ச்சியாக அடித்த இரண்டாவது சதம். ஒருவேளை இரட்டை சதமாக மாற்றவில்லை என்றாலும் அடுத்தடுத்த சதத்தால் தனது துவக்க இடத்தை உறுதி செய்து விட்டார். வேகம், சுழல் என ஒவ்வொரு வித பந்துவீச்சுக்கும் ஏற்ப தனது கால்களை முன்னும் பின்னும் நகர்த்தி அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல்., அரங்கில் தன்னுடன் விளையாடும் பெர்குசன் ஓவரில், ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து மிரட்டினார்.

இவ்வாறு அவர் கூறினார்.


ரோகித் ‘காமெடி’

ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் ரோகித் (208, 264, 209), இஷான் கிஷான் (210), சுப்மன் கில் (208) என மூன்று இந்திய வீரர்கள் ஐதராபாத் ஒருநாள் போட்டி முடிந்த பின் இணைந்து பேசினர். அப்போது இஷானிடம் கூறிய ரோகித்,‘ இரட்டை சதம் அடித்த பின் அடுத்த மூன்று போட்டியில் நீங்கள் களமிறங்கவில்லை,’ என காமெடியாக தெரிவித்தார். 

இதற்குப் பதில் தந்த இஷான்,‘ஆனால் நீங்கள் தான் கேப்டன்,’ என்றார். 

அப்போது இஷான் குறித்து சுப்மன் கூறுகையில்,‘‘ அலைபேசியில் அதிக சப்தத்துடன் தான் இஷான் படம் பார்ப்பார். சப்தத்தை குறை என பலமுறை திட்டினாலும் கண்டு கொள்ள மாட்டார். மாறாக,‘ இது என் அறை, இங்கு நான் வைத்தது தான் சட்டம்,’ என்பார். தினமும் அவருடன் போராட்டமாகத் தான் இருக்கும்,’’ என்றார். 

மூலக்கதை